மைனர் சொத்து நீதிமன்ற அனுமதி இல்லாமல் விற்பனை செய்யப்பட்டுள்ளது - அது சட்டப்படி செல்லாது.



ஹரிபுத்திரி கவுண்டர் மற்றும் அவரது மகன்களான முனுசாமி கவுண்டர், ஏழுமலைக் கவுண்டர் ஆகியோர்கள் அடங்கிய கூட்டு குடும்பத்திற்கு சில சொத்துக்கள் இருந்தது. பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்மொழி பாகப்பிரிவினையில் ஒரு சொத்தின் மேற்கு பாகம் அண்ணனான முனுசாமி கவுண்டருக்கும், கிழக்கு பாகம் தம்பியான ஏழுமலைக் கவுண்டர் பாகத்திற்கும் ஒதுக்கப்பட்டது. பின்னர் அவரவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பாகத்தை தனித்தனியாக வரி செலுத்தி அனுபவித்து வந்தனர். இந்நிலையில் முனுசாமி கவுண்டர் அவருக்கு ஒதுக்கப்பட்ட மேற்கு பாகத்தை தர்மசிவம் என்பவருக்கு 1972 ஆம் ஆண்டு விற்பனை செய்து விட்டார். அதன்பிறகு வேறு ஒருவருடன் சேர்ந்து சொத்துக்களை பரிவர்த்தனை செய்து கொள்கிறார். அந்த பரிவர்த்தனை ஆவணங்கள் மைனர் மகன்கள் மூலமாக நடைபெறுகிறது. இதன்மூலம் வழக்கு சொத்து முழுவதும் ஏழுமலைக் கவுண்டருக்கும், அவரது மகன்களுக்கும் வருகிறது. இந்நிலையில் ஏழுமலைக் கவுண்டரின் மனைவியின் உறவினரான ஒருவர் வழக்கு சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் ஏழுமலைக் கவுண்டரின் மது பழக்கத்தை பயன்படுத்தி 1984 ஆம் ஆண்டு சொத்தை எழுதி வாங்கிக் கொண்டார். ஆனால் அந்த சொத்து மைனர் மகன் பெயரில் இருந்தது. இந்த ஆவணத்தை பயன்படுத்தி உறவுக்காரர் சொத்தில் அத்துமீறி நுழைய முயற்சி செய்கிறார். அப்போதுதான் மைனர் மகன் சொத்தை தனது கணவர் ஏழுமலைக் கவுண்டர் எழுதிக் கொடுத்திருக்கும் விபரம் தாய் கிருஷ்ணவேணிக்கு தெரிய வருகிறது. அதனால் மைனர் மகன் சார்பில் காப்பாளராக இருந்து தாய் சொத்தை பொறுத்து திண்டிவனம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறார். அந்த வழக்கில் ஆஜரான பிரதிவாதி கூட்டுக் குடும்பத்தின் தேவைக்காகவும், நன்மைக்காகவும் ஏழுமலைக் கவுண்டர் சொத்தை தனக்கு விற்பனை செய்து விட்டார். இந்த விபரம் அவரது மனைவியான கிருஷ்ணவேணிக்கும் நன்றாக தெரியும். கூட்டு குடும்பத்தின் நன்மைக்காக சொத்தை விற்க குடும்பத் தலைவருக்கு உரிமை உண்டு என்று கட்சி செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மைனர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதனை எதிர்த்து மைனர் மகன் திண்டிவனம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் முதல் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிபதி கீழமை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து மைனர் மகனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார்.

அதனை எதிர்த்து பிரதிவாதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்தார்.

வழக்கை நீதிபதி திரு. N. பால் வசந்தகுமார் விசாரித்தார்.

இந்து இளவர் மற்றும் பாதுகாப்பு சட்டம் 1956 ன் பிரிவு 8(2)ன்படி மைனர் மகனுக்கு உரிமையான சொத்தை விற்பனை, ஒப்பந்தம் செய்து கொள்ள தந்தைக்கு உரிமை உண்டா என்பதை முக்கிய வினாவாக எழுப்பி பரிசீலித்தார்.

இந்து இளவர் மற்றும் பாதுகாப்பு சட்டம் 1956 பிரிவு 8 ல் இயற்கை காப்பாளரின் அதிகாரம் குறித்து கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பிரிவு 8(1) ன் ல் மைனர் மகனின் நலனுக்காக தேவையான அனைத்தையும் செய்ய இயற்கை காப்பாளருக்கு அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பிரிவு 8(2) ல், சிவில் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் மைனருக்கு சொந்தமான சொத்தை அடமானம், விற்பனை, பரிவர்த்தனை, அன்பளிப்பு மற்றும் 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பிரிவு 8(3) ல் மைனருக்கு சொந்தமான சொத்தில் ஏதாவது வில்லங்கத்தை இயற்கை காப்பாளர் ஏற்படுத்தினால் அது சட்டப்படி செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. 

ஏற்கனவே உச்சநீதிமன்றம் 2002 - 4 - LW - 330 என்ற வழக்கில் ஒரு இயற்கை காப்பாளர் நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக மைனருக்கு சொந்தமான சொத்துக்களை வில்லங்கம் செய்தால் அது சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. 

இந்த வழக்கில் ஏழுமலைக் கவுண்டரின் குடிபோதையை பயன்படுத்தி சொத்தை எழுதி வாங்கியது சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மைனர் குழந்தையின் நன்மைக்காக சொத்து விற்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மைனர் சொத்து நீதிமன்ற அனுமதி இல்லாமல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

எனவே முதல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிகச் சரியானது என்று கூறி பிரதிவாதிகள் தாக்கல் செய்த இரண்டாம் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

2006 - 1 - CTC - 390
Dated - 27.01.2006

(தீர்ப்பு விபரங்களை மிகச் சுருக்கமாக எழுதி இருக்கிறேன். விரிவான விபரங்களுக்கு முழு தீர்ப்பையும் வாசித்துக் கொள்ளவும்)

Comments